மலேசிய பாத்தேக் தயாரிப்புகளை உலக ரீதியில் பிரபலப்படுத்தும் உடன்பாடு: இண்டா அட்லியர் நிறுவனத்தின் வர்த்தகத் தூதராக இராஜேஷ் வைத்யா நியமனம்

கோலாலம்பூர், ஜன. 9- நமது நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் பாத்தேக் கலை தயாரிப்புகளை உலகளவில் பிரபலப்படுத்தும் அரிய முயற்சியில் ‘இண்டா அட்லியர்’ நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இண்டா அட்லியர் நிறுவனத்தின் வர்த்தகத் தூதராக இந்தியாவின் பிரபல வீணை கலைஞர் இராஜேஷ் வைத்யா அவர்களை நியமனம் செய்யும் உடன்பாடு அண்மையில் தலைநகரில் கையெழுத்திடப்பட்டது.

இண்டா அட்லியர் நிறுவனம் பாத்தேக் தயாரிப்புகளை உலகளவில் விற்பனை செய்யும் வர்த்தக நோக்கினை மட்டும் கொண்டிராமல், #மைஆர்டிசான் இயக்கத்தின் வாயிலாக மலேசிய பாத்தேக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு வருகின்றது. அதே வேளையில், 100 மீட்டரில் பாத்தேக் கலையின் வாயிலாக நம் நாட்டின் வரலாற்றையும், எதிர்காலத்தையும் பறைச்சாற்றும் முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில், மலேசிய தேசியக் கீதமான ‘நெகாராகூ’ இசையினை, தனது வீணை வாயிலாக இசைத்து மலேசியர்களின் பாராட்டுகளை இராஜேஷ் வைத்யா பெற்றது குறிப்பிடத்தக்கது. அனைத்துலக ரீதியில் எல்டன் ஜோன், ஏ.ஆர். ரகுமான், இளையராஜா போன்ற புகழ்ப்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பதுடன், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் இசையமைப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார் கலைமாமணி இராஜேஷ் வைத்யா.

தனது ‘இண்டா அட்லியர்’ நிறுவனம் மலேசிய பாத்தேக் தொழில்துறையின் படைப்பாற்றலையும் புதுமைகளையும் உலக அரங்கில் பிரபலப்படுத்துவதை முக்கிய நோக்காக கொண்டுள்ளது என அதன் தலைமை செயல்முறை அதிகாரி மதுமதி மாணிக்கவாசகர் பிள்ளை தெரிவித்தார்.

துபாய், லண்டன், இத்தாலி, எகிப்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்த பாத்தேக் தயாரிப்புகளை பிரலப்படுத்தி வருகின்ற இவர், இனி ராஜேஷ் வைத்யாவின் வீணை இசைப் படைப்போடு மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சார நடவடிக்கைகள், தனது நிறுவனத்தின் அடைவுநிலையை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் என நம்புவதாக மதுமதி தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய இராஜேஷ் வைத்யா, மலேசிய பாத்தேக் தயாரிப்புகளை உலகளவில் பிரபலப்படுத்த தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பினில் பெருமிதம் அடைவதாக குறிப்பிட்டார்.

“பாத்தேக் உடைகள் எனது இசையினையும், எனது அடையாளத்தினையும் வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளன. இனி, பாத்தேக் கலையும் இசைக்கலையும் ஒருங்கே உலகை வலம் வர உள்ளன,” என மேலும் கூறினார்.

Be the first to comment on "மலேசிய பாத்தேக் தயாரிப்புகளை உலக ரீதியில் பிரபலப்படுத்தும் உடன்பாடு: இண்டா அட்லியர் நிறுவனத்தின் வர்த்தகத் தூதராக இராஜேஷ் வைத்யா நியமனம்"

Leave a comment

Your email address will not be published.


*